வயது ஒரு தடையல்ல ..''
வயது என்பது மனதைப் பொறுத்தது. நாம் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் இருந்தாலே போதும். வயது முதிர்ந்தவர்கள் 23 வயது இளைஞனைப் போல இன்னும் உற்சாகத்துடன் பல சாதனைகளை செய்து கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம்..
நாம் மனம் தளரும் வரை நம்முடைய கனவுகளை யாரலும் நம்மிடம் இருந்து பறித்து விட முடியாது.
கனவுகளை அடைவதற்குத் தேவை முயற்சி மட்டுமே. நாம் விரும்பும் வாழ்க்கையையும், வானத்தையும் வசப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தருவது மன உறுதி தான்..
நாம் சராசரியாக வாழும் 60 அல்லது 70 ஆண்டுகளில் இந்த பூமிக்கு வெறும் பாரமாக மட்டும் வாழ்ந்து விட்டு மறைகிறோமா?
அல்லது, பாரமாக பல சுமைகள் நம் தோள்களில் கனத்தாலும் மற்றவர்கள் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச் செல்கிறோமா? என்பதைப் பொறுத்துத் தான் வரலாறு நம் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கிறது.
நம்மில் பெரும்பாலோர் வரையறுக்கப்பட்ட பாதையில் செல்லும் வழிப்போக்கர்களாக மட்டும் இருப்பதால், மக்கள் தொகையில் ஒரு புள்ளி விவரமாகவே இருந்து விட்டு மறைகிறோம்.
ஒரு சிலர் தான் தங்களுக்கு முன் இருக்கும் முட்புதர்களைக் களைந்து புதிய பாதைகளை அமைத்துப் புதிய பயணங்களை மேற்கொண்டு வெற்றி பெறுகிறார்கள்..
இதற்கு உதாரணமாக நமக்கு பிடித்தமானவற்றை செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிருபித்திருக்கிறார் சீனாவை சேர்ந்த வாங்டேஷன் என்ற முதியவர்.
சீனாவின் வட கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் 80 வயதான வான் டேஷன். இவர் தனது பிறந்தநாள் அன்று சீனாவின் ஃபேஷன்ஷோவில் பங்கேற்று நடந்ததன் மூலம் சீனாவின் 'கவர்ச்சியான தாத்தா' என்று சமூக வலைதளங்களிலும், சீன மக்களிடையேயும் அடையாளம் காணப்பட்டு உள்ளார்...
அவர் ஒரு பேட்டியில் இவ்வாறு சொன்னார்..
''50 வயதிலிருந்து உடற்பயிற்சி தீவிரமாக செய்து வருகிறேன். 79 வது வயதில் முதல் முதலில் ஃபேஷன் ஷோவில் நடந்தேன்.
இது இரண்டாவது முறை. நமக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட வயது ஒரு தடையே இல்லை. எனக்கு தற்போது 80 வயதாகிறது..
ஆனாலும், இன்னும் எனக்குக் கனவுகள் நிறைய இருக்கிறது. அதனை நிச்சயம் அடைவேன் என்று சொன்னார்..
ஆம்., நண்பர்களே..,
எந்த சாதனைகளுக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும், முதுமையும் உடலுக்குத் தானே தவிர, அறிவுக்கும், உழைப்புக்கும் இல்லை..
No comments:
Post a Comment