Monday 11 May 2020

கந்தசஷ்டி கவசம்

படித்ததில் மனதிற்கு பட்டது பகிர்கிறேன். உலக அரசுகள் கொரொனாவுடன் வாழ பழகுங்கள் இனி வேறுவழியில்லை என கையினை விரித்துவிட்டது, இனியும் ஊரடங்கை தாங்க அரசுகளால் முடியாது, தேசத்து கட்டமைப்பே உடைந்துவிடும் என அஞ்சுகின்றன‌

லட்சகணக்கில் மக்களை காவு கொடுத்த அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த முடிவுக்கு வந்தாயிற்று, மருத்துவமும் அரசும் கைவிட்ட நிலையில் இனி தெய்வமே கதி.

சென்னையிலும் கொரோனா தலைவிரித்தாடும் நேரமிது

அறிவியல் உச்சத்தில் ஆடும் அந்த தேசங்கள் மருந்தில்லா நோய்க்கு தெய்வமே துணை என சரணடைந்துவிட்ட நேரம் சென்னையும் தமிழகமும் அதற்கு தப்பமுடியாது.

இந்நிலையில் தமிழர்கள் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம்

அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்

கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருகபெருமான் காட்சிஅளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்கின்றான்

அந்த இடத்தில் இருந்து பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அதுதான் கந்த சஷ்டி கவசம்

சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு

நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளபட்டது

அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது

ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பே
சிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது

இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது

ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல்

உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல் இது

தொடரும் பாடலில் அர்த்தமில்லா சில வரிகள் வருவதாக தோன்றும், உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக‌

இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.

அக்கால புலவர்கள் ஞானமிக்கவர்கள், சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீக மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான‌ சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள்

தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார்

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் , சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும்

ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள்

ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே

அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்

குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல், பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும் நோய்கள் நெருங்கா, செங்கல் இருந்தும் மன்னர்கள் கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான்

முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்

முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்

வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம்

நலம் பெற்றோர் ஏராளம், ஆசியாவினையே புரட்டி போட்ட சுனாமி திருச்செந்தூர் பக்கம் வாலை சுருட்டி இருந்தது என்பதும் கண்டது

இதைத்தான் பாடலாக சொன்னார்கள்

"முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே.."

இனி மனிதர் தங்களை தாங்களே காத்துகொள்ள வேண்டும் எனும் சூழல் வந்துவிட்ட நேரம், தெய்வ அனுக்கிரகம் ஒன்றே வழி.

தமிழர்கள் தங்கள் தனிபெரும் கடவுளை, அவன் கொடுத்த பாடல் வழி தேடட்டும், தமிழருக்காய் அல்ல உலக மக்களுக்காய் முறையிடட்டும்

எந்த பாடலை பாடினால் மக்களெல்லாம் நோயிலிருந்து விடுபடுவார்கள் என முருகனே சொன்னாரோ அந்த பாடல் பாடபடட்டும்

ஆலயத்திலும் வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ அது உருக்கமான பாடபடட்டும்

அதில் தமிழினம் பாதுகாக்கபடும், நிச்சயம் முருகன் தமிழகத்தை காப்பார், சுனாமி நேரம் திருசெந்தூர் ஆலய மக்களை ஒரு சொட்டு கடல்நீரும் தாக்காமல் காத்த முருகன், நிச்சயம் தன்னை அழைக்கும் ஒவ்வொருவரையும் காப்பார்

நம்பிக்கையோடு கந்த சஷ்டி கவசத்தை முன்னெடுப்போம், நிச்சயம் நல்லது நடக்கும்

No comments:

Post a Comment