Thursday, 28 May 2020

"கூச்ச சுபாவம்

"கூச்ச சுபாவம்.."

நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டை அடிப்பவர்களில் பலர் நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய் விடுவார்கள். காரணம் கூச்சம்.

அதுவும் மேடைகளில் ஏறிப் பேச வேண்டும் எனில் அவ்வளவு தான் வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் தான் அனேகம்...

வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்தக் கூச்சத்தினால் தொடர் தோல்விகளையே சிலர் சந்திக்கின்றனர்.

இந்தக் கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என்று பலர் புலம்புவதைக் கேட்டு இருப்போம்..

சின்னத் தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்து விடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம்.

கூச்ச இயல்பு உள்ளவர் தம் குறைகளையே பெரிதுபடுத்திக் கொள்கிறார் என்று சொல்கிறார்கள். குறைகளை உணர்ந்து கொள்ள வேண்டியது தான். 

ஆனால் அந்தக் குறைகள் என்னென்ன, பயமா, கவலையா, எத்தகைய பயம் என்பதை அலசி, ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, அந்தக் குறைகள் இருக்கின்றனவே என்று நினைத்து ஒதுங்கி நிற்பதில் பயன் ஏதும் இல்லை.

தன்னால் மற்றவர்களைப் போல இயல்பாகவும், இயற்கையாகவும் பேச முடியும் என்ற நம்பிக்கை மிகத் தேவை. 

இந்த நம்பிக்கை வாய்ப்புகளை எதிர்நோக்க உதவும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போது வெற்றி தானாக வருகிறது. வசதிகளை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவது என்பதில் அக்கறை கொள்ள வேண்டும்.

திருப்புமுனையாக ஏதாவது நிகழ்ந்து தான் கூச்ச இயல்பு மறைய வேண்டும் என்று காத்து இருக்கக் கூடாது.

பேச்சுத் திறமையோ, வாதத்திறமையோ அவசியம் இருந்து தான் ஆக வேண்டும் என்பது இல்லை. 

கலந்துரையாடலில் இயல்பாகச் சேர்ந்து கொண்டு, பேசக் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திப் பேச வேண்டும். 

தன்னாலும் தனிப்பட்ட ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்பி உரையாட வேண்டும். 

சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை’ என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டு பிடித்தவர்களின் அனுபவங்கள் இவை.

திக்குவாய் என்பதால் கூச்ச சுபாவம் உடையவனாக இருந்தான் அவன். ஆனால், அது அவனை எந்த விதத்திலும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ, புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்துவதையோ தடுக்கவில்லை. கூச்ச சுபாவத்தை மீறி வந்ததால் தான் ஒரு ஆப்ரகாம் லிங்கன் உதித்தார்!

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம். ஆனால், அவள் புகழ்பெற்ற மர்ம நாவல்கள் எழுதி அகதா கிறிஸ்டியாக வளர்வதை அந்தக் கூச்சத்தால் தடை செய்ய முடியவில்லை!

ஆள் கோமாளி மாதிரி இருந்தான். அவனுடைய குரல் மோசமாக இருந்தது. இவை இரண்டும் அவனுக்கு கூச்ச உணர்வைக் கொடுத்தது. அந்தக் கூச்சத்தை தகர்த்து எறிந்து அவன் கண்டு பிடித்த சினிமா தான் இன்று உலகின் நம்பர் ஒன் பொழுது போக்கு. அவர் தாமஸ் ஆல்வா எடிசன்!

இன்னும் பட்டியல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்களே மாறாத வரையில் இவைகள் வெறும் வார்த்தைகள் தான்!

ஆம்., நண்பர்களே..,

ஒன்றே ஒன்று தான்.. கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. 

கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவர்களால் தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்..!    

Motivational - 29 May 2020




Tuesday, 26 May 2020

''சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்..''

''சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்..''

நம் எல்லோருக்குமே  விரும்பாத ஒன்றைத்தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. 

அதன் மூலம் நம்முடைய தனித் திறன்கள் என்ன என்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன் முதலாகத் தெரிய வருகிறது.

ஒரு செயலில் இறங்க வேண்டுமா? என்ற தயக்கம் எழுகிற போது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும் என்றுதான் உள் மனது சொல்லும். 

ஆனால் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்த உடனேயே புத்தம் புதிய உலகம் நமக்காகத் திறந்து கொள்கிறது. 

எந்தச் சூழலிலும் துணிவாக முடிவு எடுப்பதும், தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்.

ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸி சிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்து வந்த இளைஞன் ஒருவனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலை பார்த்தார். 

விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் மகிழ்ச்சியான வேலையாக இல்லை..

ஓரிடத்தில் நின்று கொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற வேலையில், வெய்யிலில் உலர்ந்தும், வியர்வையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஆனால் அந்த இளைஞன் மன உறுதியுடன் செயல்பட்டான். செங்கற்கள் கைகளில் வந்து விழுகிற போது எல்லாம் கரங்களைப் போலவே அவன் மனதிலும் உரம் ஏறிக் கொண்டு இருந்தது. 

ஒவ்வொருமுறை செங்கல்லைப் பிடிக்கும் போதும் வாழ்வில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்று உறுதி கொண்டான் அந்த இளைஞன். 

கைகளில் செங்கல்லைத் தாங்கிக் கொண்டே ஒரு கால்பந்து வீரனாக தான் வரவேண்டும் என்ற கனவுக்கு நெய் வார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்தக் கனவு நனவானது.  

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரனாய் வளர்ந்த ஜெர்ரி ரைஸ்தான் அந்த இளைஞன்.

கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட “நட்சத்திரங்களுடன் ஒரு நடனம்” (Dancing with the Stars) தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அவரை அறிந்து கொண்டு இருந்தார்கள்.

தன் வாழ்வில் தன்னைப் பிழிந்த வறுமையைத்தான் பிழிந்து சாரம் எடுத்து, சாறு குடித்து, வெற்றி வேட்கையைத் தணித்துக் கொண்ட ஜெர்ரி ரைஸ், தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது சொன்னவை  வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற வெற்றிச் சூத்திரங்கள்..

ஜெர்ரி ரைஸ் சொல்கிறார்..,

என்னை நோக்கி வீசப்பட்ட செங்கல்களைப் பிடிப்பது வேறு வழி இல்லாத வேலை. ஆனால் பலர் வெட்டி வேலை என்று  விமர்சனம் செய்தார்கள். 

ஆனால் அந்த வலி மிகுந்த நேரத்தில்  என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டு எதிர்காலத்தின் வரை படத்தை இதயத்தில் வரைந்து கொண்டேன்.. 

அந்த வலியில் விழுந்த வியர்வைத் துளிகள் என்னுள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர் கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தன. 

கொளுத்தும் வெய்யிலில் அசராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்து இருக்கும் பக்குவத்தைப் பரிசாய்த் தந்தது.

 நான் சிறந்த கால்பந்தாட்ட வீரராக வருவது என்று  முடிவு எடுத்ததுமே, ஒவ்வொரு நாளும் ஐந்து மைல் தூரம் மலைப் பகுதியில் ஓடுவதை வழக்கமாகக் கொண்டேன்..

உடலுறுதியை எவ்வளவு தூரம் வளர்த்து எடுக்கிறோமோ அந்த அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியும் என்பதுதான் என் உள் மனம் சொல்லியது. 

 இந்தக் கூடுதல் தகுதியை நான் வளர்த்து கொண்டதால் கால்பந்தாட்டத்தில் என்னால் தனித் தன்மையுடன் விளங்க முடிந்தது..

ஆம்., என் அன்பு நண்பர்களே.

மிகப்பெரிய சாதனை ஆளராக வளர வேண்டும் என்று விரும்பி விட்டால் குறிக்கோள் நோக்கிக் கடுமையாக உழைக்க வேண்டும். 

கூடுதல் தகுதிகளை வளர்க்க வேண்டும். சவால்களையே சந்தர்ப்பமாக்கி வெற்றி காண வேண்டும். 

ஜெர்ரி ரைசுக்கு மட்டுமல்ல. இது ஒவ்வொருவருக்குமே வாழ்க்கை தருகிற வெற்றிச் சூத்திரம்......💐💐💐💐💐💐

இனிய காலை வணக்கம் !!!!

Motivational - 27 May 2020




Sunday, 24 May 2020

படித்ததில் பிடித்தது !!!!

படித்ததில் பிடித்தது !!!!

அதிகாலை மணி இரண்டைத் தொட்டுக் கொண்டு இருந்தது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவண்ணம் இருந்தான் சொக்கலிங்கம். மாலையில் தன் தம்பி ராமலிங்கத்துடன் தொலைபேசியில் பேசியதிலிருந்து தவிப்பாகவே இருந்தது அவனுக்கு. 

வீட்டு கட்ட உதவும் சாமான்கள் மற்றும் வண்ணங்கள் விற்கும் கடை நடத்துபவன் சொக்கலிங்கம். தொழில் பழகுகிறேன் என்று சென்னைக்குச் சென்ற தம்பி ராமலிங்கம் ஓரளவு அனுபவம் வந்தவுடன் ஒரு ஜவுளிக் கடை தொடங்கி வெற்றியாக நடத்தி அந்த நகரத்திலேயே தங்கி விட்டவன். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு, தான் வீடு கட்டப் போவதாகவும், பண உதவி தேவைப்படுவதாகவும் சொல்லி வேண்ட, சொக்கலிங்கமும் ஒத்துக் கொண்டான். 

அவன் மனைவி கற்பகம், “ஏங்க, நாம கூட வீடு கட்டணும்னு ப்ளான் பண்ணியிருக்கோம்ல. இப்போ உங்க தம்பிக்கு எப்படிக் குடுக்கிறதாம்?”

“நீயே யோசிச்சுப் பார், நாம பணம் ஓரளவு ரெடி பண்ணி, கூடக் கொஞ்சம் லோன் வாங்கிக் கட்டணும்னா கூட இன்னும் ரெண்டு வருசம் ஆகும். அதுவரைக்கும் சேமிக்கிற பணத்த அவனுக்குக் கொடுப்போம், அவனாவது வீடு கட்டட்டும். பின்ன நமக்கு வேண்டிய போது திருப்பித் தரப் போறான்”

“பாங்க்ல போட்டா கொஞ்சம் வட்டியாவது வரும்ல”

“பரவால்ல, அவனுக்கு நான் உதவலைன்னா வேற யாரு செய்யப் போறா?”

சொக்கலிங்கத்திற்கும்  ராமலிங்கத்திற்கும் ஒன்றரை வருடங்கள் தான் வித்தியாசம். முதலிலிருந்தே தன் தேவைகளைக் குறைத்து தம்பிக்காக விட்டுக் கொடுத்து வேண்டிய உதவிகளைச் செய்வதில் முனைப்பாக இருந்தவன் சொக்கலிங்கம். தந்தை இல்லாததால் அது தன்னுடைய கடமை என்று கொண்டிருந்தான். ஆகையால் இப்பொழுது இந்த மாதிரி ஒரு வேண்டுகோள் வரவும் நிராகரிக்க மனம் வரவில்லை.

அது வரை சேர்த்து வைத்திருந்த பத்து லட்சத்தை அன்றே கொடுத்து விட்டான். பின்னர் தனக்கு வரும் லாபத்தை எல்லாம் அவ்வப்பொழுது அனுப்ப ஆரம்பித்தான். தம்பியின் வீடும் வளர்ந்து கொண்டிருந்தது. சென்ற வாரம் தன்னுடைய வரவு செலவுகளை எழுதி வைக்கும் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது கடைசியாக ஆறு மாதங்கள் முன்பு எட்டு லட்சம் தம்பிக்குக் கொடுக்கப்பட்டதாக எழுதியிருந்தான். மொத்தம் இருபத்தியெட்டு லட்சம் ஆகியிருந்தது. தம்பி தானாகத் திருப்பித் தரும் வரை தாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டான்.  

இன்று மாலை தம்பியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

“அண்ணே சௌக்கியம் தானே?” 

“ராமா, வீடு எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?” 

“இப்போ கொஞ்சம் இன்டீரியர் ஒர்க் நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் எப்படியும் நாலு மாசத்துல குடி போயிறலாம்ன்னு இன்ஜினியர் சொல்லியிருக்கார்”

“ரொம்ப சந்தோசம். ஒரு வீடு தான் கட்டி வாழப் போறோம், நல்லா செஞ்சுக்கோ. எதிலும் குறை வைக்காதே, பின்னாடி இப்படி பண்ணி இருக்கலாம் அப்படி பண்ணி இருக்கலாம்ன்னு தோணக் கூடாது, சரியா?” 

“அண்ணே உங்க மேற்பார்வையில் வளர்ந்தவன் நான். விரலுக்கேத்த வீக்கம்ன்னு நீங்க அடிக்கடி சொல்வீங்க. என் விரல் எனக்குத் தெரியும். சரி, நீங்க எப்போ தொடங்கப் போறீங்க?”

“நீ முதல்ல முடிச்சுக்கோ. அப்புறம் பார்த்துக்கலாம்” 

“இப்பவே ப்ளான் பண்ண ஆரம்பிச்சிருங்க. நான் எப்படியும் அடுத்த ஒரு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா உங்ககிட்ட வாங்கின இருபத்திமூணு லட்சத்தை கொடுத்துடறேன்”

இப்படித் தம்பி சொல்லவும் சில வினாடிகள் மௌனமாக இருந்தான் சொக்கலிங்கம். ‘என்னடா இது, இருபத்தியெட்டு லட்சம் ஆயிற்றே, இவன் இருபத்திமூன்று என்கிறானே’ 

தொலைபேசியில். “தம்பி, அது இருபத்திமூணா? இருபத்தியெட்டுன்னு நான் நினைக்கிறேன்” 

“அப்படியா, நான் செக் பண்ணிட்டு ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சுக் கூப்பிடுறேன்”

இது வரை நடந்த உரையாடல் ஒன்றும் பெரிதாகப்படவில்லை சொக்கலிங்கத்திற்கு. இரண்டு நிமிடங்கள் கழித்து  மறுபடியும் அழைப்பு வந்தது.

“அண்ணே, ஃபுல்லா செக் பண்ணிட்டேன், இருபத்திமூணு லட்சம் தான் வாங்கி இருக்கிறேன்”

இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று சற்று யோசித்தார் சொக்கலிங்கம். 

“ஒரு வாரம் முன்னாடி தான் இந்த வீடு கட்டின வரவு செலவுகள் அக்கவுண்ட்ஸ் எல்லாம் எங்க ஆடிட்டர் கிட்ட கொடுத்தேன். அப்போ உன் சைடுல இருந்து இருபத்திமூணு லட்சம் வந்திருக்குன்னு அவரும் சொன்னது ஞாபகம் இருக்கு”

“அப்படியா, நானும் ஒண்ணுக்கு ரெண்டு தடவ செக் பண்றேன். நீயும் ஒரு தடவை மறுபடியும் பாரேன்”

“சரி, பாக்குறேன்”. அலைபேசி துண்டிக்கப்பட்டது 

அப்பொழுது ஆரம்பித்த தவிப்பு இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருந்தது. 

‘இதைத் தம்பி வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பு இல்லை. எங்கோ தவறு நடந்திருக்கிறது. இப்பொழுது இதை மேற்கொண்டு எப்படி எடுத்துச் செல்வது? மனைவியிடம் இந்த உரையாடலைச் சொல்லி கலந்தாலோசிக்கலாமா? வேண்டாம், வேண்டாம். யாருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விடக்கூடாது. ஐந்து லட்சம் என்பது ஒரு சிறிய தொகை அல்ல. நாளை அழைக்கிறேன் என்று கூறியிருக்கிறான். ஒருவேளை இருபத்திமூன்று தான் என்று சொல்லி விட்டால்…………?’ 

யோசிக்க யோசிக்க, இந்த விவகாரத்தால் இத்தனை வருட உறவு முறிய வாய்ப்பு உள்ளதை உணர்ந்தான். மனது கனக்க ஆரம்பித்தது. 

‘இல்லை இல்லை அப்படி ஒன்றும் நடக்காது’

ஒருவேளை தம்பி தன்னை ஏமாற்ற நினைக்கிறானோ என்று ஒரு கணம் சிந்தித்தான்.  பின்னர் உடனே தன்னைத் தானே கடிந்து கொண்டான், அவ்வாறு நினைத்ததற்காக வருத்தப்பட்டான். மீண்டும் அந்தக் கணக்குப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தான். 

‘அவனுக்குக் கொடுக்கவில்லையென்றால் வேறு எதற்கு செலவு செய்தேனோ அதை எழுதியிருப்பேன், அப்படி ஒன்றும் இல்லையே’

இதோ படுக்கைக்கு வந்து நான்கு மணி நேரங்கள் ஆகிவிட்டன, தூக்கம் வரவில்லை. எப்படி வரும்? 

‘நாற்பது வருட பந்தம், இந்தப் பணம் என்னும் பேயால் அழிந்து விடுமோ? என்ன செய்யலாம்… என்ன செய்யலாம்............?’ 

திடீரென்று ஒரு ஞானோதயம் உதித்தது. 

‘நான் இனி அவனிடம் இதைப்பற்றி கேட்கப்போவதில்லை. ஐந்து லட்சம் தானே, அடுத்த ஆறு மாதங்களில் நான் அதை மீட்டெடுக்க முடியும். ஒரு சில மாதங்கள் என் தொழிலில் நஷ்டம் இருந்ததாக எண்ணிக் கொள்கிறேன், அவ்வளவுதானே. நல்ல வேளை, வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. இதை இப்படியே விட்டு விடுவோம். இதன் மூலம் குடும்பத்தில் எந்தக் குழப்பமும் இல்லாமல், எந்த விரிசலும் ஏற்படாமல் இப்பொழுது உள்ளபடியே தொடரட்டும். ஐந்து லட்சம் பெரிதா, தம்பி பெரிதா? போகட்டும் அந்தப் பணப்பேய்….”  

இந்த எண்ணம் தோன்றியவுடன் அவன் மனது மிகவும் அமைதி அடைந்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் உறங்கிப் போனான். 

அடுத்த நாள் காலை வெளியே சற்று உலாத்திவிட்டுத் திரும்பியபோது, அவர் மனைவி,

“என்னங்க நேத்து சரியா தூக்கம் இல்ல போல? என்ன விஷயம்?” 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல” 

“இப்போகூட காலையில இருந்து என்கிட்ட ரெண்டு வார்த்தை கூட பேசல”

அதைக் காதில் வாங்காதது போல் அன்றைய தினசரியைப் படிக்க ஆரம்பித்தான் சொக்கலிங்கம்.

“அபிராமி ஃபோன் பண்ணினா”

சட்டென்று நிமிர்ந்தான். அபிராமி ராமலிங்கத்தின் மனைவி. ‘தான் மறைக்க நினைத்தது வெளிப்பட்டு விட்டதோ?’

“என்னவாம்?”

“இந்த லீவுல கொழந்தைங்கள இங்க கொண்டு வந்துவிடப் போறாளாம். பெரீம்மா வீட்டுக்குப் போணும்ன்னு சொல்றாங்களாம். நம்ம சித்திரைத் திருவிழா வருதில்ல. போன வருஷம் மிஸ் பண்ணிட்டாங்களாம், இந்த வருஷம் கண்டிப்பா பாக்கணுமாம். நம்ம பையனுக்கும் அவங்ககூட நல்லா பொழுது போகும்”

“அவ்வளவு தானே”

“என்ன கொஞ்சம் கூட சுவரசியம் இல்லாமக் கேக்குறீங்க?”

“வரட்டும்மா, நல்லா வரட்டும்”

“ஒண்ணு கவனிச்சீங்களா? பெரீம்மா வீடுன்னு சொன்னாங்களாம், பெரீப்பா வீடுன்னு சொல்லல…” என்று சொல்லிச் சிரித்தாள் கற்பகம்.

அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சொக்கலிங்கம்.

“அப்பறம் இன்னொண்ணும் சொன்னா”

“………………”

“நாம பணம் கொடுத்ததால தான் இவ்வளவு சீக்கிரம் வீடு கட்ட முடிஞ்சதாம். ஒரு தாங்க்ஸ் சொல்லச் சொன்னா”

இது வரை இறுக்கமாக இருந்த சொக்கலிங்கத்தின் முகம் மலர்ந்தது. தான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என்று தன் மேல் ஒரு சிறிய கர்வம் கூட எட்டிப் பார்த்தது அவனுக்கு. 

அன்றும் அடுத்த இரண்டு நாட்களும் தம்பியிடமிருந்து அழைப்பு வரவில்லை. 

மூன்று நாட்கள் கழித்து காலையில் அலைபேசி சிணுங்கியது, ராமலிங்கம் என்று பெயரையும் காண்பித்தது. சொக்கலிங்கத்தின் மனம் படபடக்க ஆரம்பித்தது. தான் எடுத்த முடிவைக் காக்க உதவுமாறு ஒருகணம் ஆண்டவனை வேண்டி விட்டு கைபேசியை எடுத்தான்.

“ஹலோ, சொல்லு ராமா”

“அண்ணே மன்னிக்கணும். ஆடிட்டர் இப்போ தான் கூப்பிட்டார். நீங்க சொன்னது தான் சரி, இருபத்திஎட்டு லட்சம் வாங்கியிருக்கேன் உங்ககிட்ட இருந்து”

சொக்கலிங்கத்திற்கு சட்டென்று பேச்சு வரவில்லை. இவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யூகித்து இருந்தாலும் நடக்காமல் போய்விட்டால என்ன ஆகும் என்ற கவலை மேலோங்கி இருந்ததால் தம்பி இவ்வாறு கூறியவுடன் அமைதியாகிவிட்டான். 

“சரிடா, பரவாயில்ல”

“ஒண்ணும் நினைச்சுக்காதீங்கண்ணே, சரியா?” 

“உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா? இதை இப்படியே விட்டுற்றா”

இப்பொழுது மனம் குதூகலம் ஆகி விட்டது. ஐந்து லட்சம் தவறாமல் இருந்ததற்காக அல்ல, உறவைத் தவற விடாமல் இருந்ததற்காக. சட்டென்று எழுந்து சட்டையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தான்.

“எங்கே கிளம்பிட்டீங்க?” 

“கோவிலுக்கு”

“என்ன இப்போ திடீர்னு?” 

“ராமன் கால்ல போய் கொஞ்சம் விழுந்துட்டு வர்றேன்”
 
---------------

ஐந்து மாதங்கள் கழித்து எல்லோரும் கிரகப்பிரவேசத்திற்கு சென்னை சென்று வந்தார்கள். வீடு கட்டிய அனுபவத்தை நன்கு விவரித்தான் தம்பி. சொக்கலிங்கம் மதுரையில் தான் வாங்கியிருந்த இடத்தைச் சொன்னவுடன் அதற்கேற்றவாறு எப்படி வீட்டைத் திட்டமிட வேண்டும் என்பதையும் விவாதித்தார்கள். 

பின்னர் வீடு கட்ட ஆரம்பித்து ஒரு ஆண்டு ஓடிவிட்டது. சொன்னபடி இருபத்தியெட்டு  லட்சத்தையும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் திருப்பித் தந்துவிட்டான் தம்பி. 

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. கடை இல்லாததால் வெளியே சென்றுவிட்டு சொக்கலிங்கம் திரும்பி வந்த போது வீட்டில் கற்பகம் யாருடனேயோ பேசிக்கொண்டிருந்தாள். 

“வாங்க, உங்களுக்காகத் தான் இவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு” 

சற்றுப் பொறுத்துத் தான் ஞாபகம் வந்தது. “ஓ, உன் தூரத்துச் சொந்தம் இல்ல?. திருச்சியில இருக்கிறதாச் சொல்லுவியே?  

“ஆமாங்க, ஸ்ரீதர்”

ஸ்ரீதர் பேச ஆரம்பித்தான். “உங்களால தான் நான் இன்னிக்கு ஒரு மனுசனா தலை நிமிர்ந்து நிக்கிறேன் மாமா” 

“என்ன சொல்ல வர்ற, புரியலையே”

“ரெண்டு வருஷம் கழிச்சு இப்படி லேட்டா வந்ததுக்கு என்ன மன்னிக்கணும்”

ஒன்றும் புரியாமல் தன் மனைவியை நோக்கினான் சொக்கலிங்கம்.

ஸ்ரீதர் தொடர்ந்தான். “நான் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு ஒருத்தன் கிட்ட பணம் கடனா வாங்கியிருந்தேன் சொன்ன டயத்துக்கு திருப்பிக் கொடுக்க முடியல. ஒரு நாள் அவன் வீட்டுக்கே வந்து சத்தம்போட்டுப் போயிட்டான், ரொம்ப அவமானமா இருந்தது. அப்போதான் என் மனைவி கற்பகம் அக்கா கிட்ட போய்க் கேட்டுப் பாருங்கன்னு ஞாபகப்படுத்தினாள். நானும் இங்கே வந்து கேட்டேன். அப்போ நீங்க எங்கேயோ அவசரமா வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. நான் சொன்னதக்கூட அரைகுறையாத்தான் கேட்ட மாதிரி பட்டுச்சு” 

கற்பகம், “ஆமாங்க, இவன் கேட்கிற அந்த அஞ்சு லட்சத்தை நம்ம பீரோவில் இருந்து எடுத்துக் கொடும்மான்னு சொல்லிட்டு நீங்க போயிட்டீங்க, நானும் கொடுத்துட்டேன்”

ஸ்ரீதர், “அந்தப் பணம் என் சொந்தக்காரங்க மத்தியிலும் என்கூட தொழில் பண்ற மத்தவங்க மத்தியிலும் என் மானம் பறிபோகாம காப்பாத்துச்சி. அதுக்கப்புறம் இந்தப் பக்கம் வரத் தோது படல. அக்காவைப் பார்க்கப் போனா பணம் ரெடி பண்ணிட்டு தான் போகணும்னு உறுதியா இருந்தேன். இந்த ரெண்டு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா தேத்திக் கொண்டு வந்துட்டேன்”. 

அவன் சொல்ல சொல்ல சொக்கலிங்கத்துக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அந்தப் பழைய நிகழ்வை ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சித்தான்.

“ரொம்ப நன்றி மாமா, நேரம் கிடைக்கிறப்போ திருச்சிக்கு வாங்க” என்று கூறியபடி கிளம்பிவிட்டான அவன். 

தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான் சொக்கலிங்கம். ‘நடந்தது என்ன? சற்று நிதானமாக யோசிப்போம். ஆக, அன்று எட்டு லட்சத்தை தம்பிக்குக் கொடுப்பதாக கணக்கு எழுதி பீரோவில் வைத்திருந்தேன். இவன் வரவும் அதிலிருந்து ஐந்து லட்சம் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தான் நேரடியாக பங்கு கொள்ளாததாலும் அன்று அவசரமாக வெளியூர் சென்று விட்டதாலும் திரும்பிவந்து இதை அந்த புத்தகத்தில் பதிவிட மறந்துவிட்டிருக்கிறேன். தம்பிக்கு அந்த சமயத்தில் மூன்று லட்சம் தான் கொடுத்திருக்கிறேன். அப்படியானால் தம்பி 28 லட்சம் வாங்கியதாகச் சொன்னானே எப்படி? கணக்கு இடிக்கிறதே’. 

யோசிக்க யோசிக்க ஒரு பலமான உண்மை புறப்பட்டது. உடனே உள்அறைக்குச் சென்று ராமலிங்கத்தைக் கைபேசியில் அழைத்தான். 

“ஏன்டா பொய் சொன்னே?” 

“என்னண்ணே புரியலையே?”
 
“உன் நல்ல மனசுக்கு அது புரியாதுடா” 

“கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க”

“அன்னைக்கு மூணா எட்டான்னு குழப்பம் வந்துச்சு, இல்லையா? நீ 23லட்சம் வாங்கிட்டு 28ன்னு ஏன் சொன்னே?”

“இல்லண்ணே, 28 தான் வாங்கியிருந்தேன்” 

“இங்க பார், ஏற்கனவே தப்பு பண்ணிட்டேன்னு மனசு என்ன குத்திக்கிட்டு இருக்கு. நீ மேலும் என்ன வேதனைப் படுத்தாத. சொல்லு, உண்மையச் சொல்லு.” 

“……………….”

“………………..”

“ஆமாம். அன்னைக்கு சாயுந்திரம் நீங்க போன் பண்ணினப்போ உங்க நிலைப்பாட்டில உறுதியா இருந்ததக் கவனிச்சேன். எங்கயோ தப்பு நடந்திருக்குன்னு புரிஞ்சது. அதுக்காக உங்ககூட சண்ட போட முடியுமா என்ன? ரெண்டுக்கு நாலு தடவை நான் எல்லாத்தையும் செக் பண்ணினேன். ரொம்ப உறுதியா 23 தான்னு தெரிஞ்சது. அடுத்த நாள் நீங்களாவே என்னைக் கூப்பிட்டு, தப்பாச் சொல்லிட்டேன்னு சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா உங்க கிட்ட இருந்து போன் வரல. அப்படீன்னா நீங்க சொன்னது தான் சரின்னு நம்பிக்கிட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சது. அடுத்த ரெண்டு நாள் எனக்கு ஒண்ணுமே ஒடல. மனசுல என்னென்னமோ பயப்படும் படியான எண்ணங்கள் எல்லாம் வந்து போச்சு. இந்தப் பணப் பிரச்சினையினால உங்கள இழந்துருவேனோன்னு பயந்தேன்..”

“…………………….”

“அப்புறமா ஒரு முடிவுக்கு வந்தேன். உங்களக் கூப்பிட்டு 28ன்னு சொன்னேன். சொல்லி முடிஞ்ச உடனே உங்க குரல்லயும் ஒரு சாந்தம் வந்ததை கவனிச்சேன். அதனால நான் எடுத்த முடிவு சரிதான்னு உணர்ந்தேன்”

சொக்கலிங்கத்தின் கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. 

“இந்த அஞ்சு லட்சம் என்ன ஒரு பெரிய பணமா? நீங்க என்னை இதுவரை கவனிச்சதுக்கு ஐம்பது லட்சம் கூட கொடுக்கலாம். உங்க கிட்ட போன்ல பேசினதுக்கப்புறம் என் மனசு ரொம்ப அமைதி ஆயிடுச்சு.”

“……………………”

“நான் அன்னைக்கே அதை மறந்துட்டேன்ணே. இப்போ எப்படி அது வெளிய வந்துச்சு?”

அவன் பேசிக்கொண்டே போக தன் கைகுட்டையால் கண்களைத் துடைத்துகொண்டிருந்த சொக்கலிங்கம் தன்னை ஆசுவாசப்படுத்திகொள்ள சற்று நேரம் ஆனது. 

“அண்ணே, லைன்ல இருக்கீங்களா?” 

“அப்புறம் பேசுறேன்டா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். மறுபடியும் வெளியே கிளம்பினான். 

கற்பகம், “எங்கே போறீங்க?” 

“கோவிலுக்கு"
‘ராமலிங்கம் கால்ல போய் விழ முடியாது, இங்கே ராமன் கால்லயாவது விழுந்துட்டு வரேன்’ என்று அவன் முனகியது கற்பகத்திற்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

Motivational - 25 May 2020




Saturday, 23 May 2020

படித்ததில் வலித்தது....

படித்ததில் வலித்தது....

சாப்பிட கொடுத்தவனை நினை..!!

தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன் "தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்.

ஓர் காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது. இரண்டாம் காலை வெட்டி விட்டு"தாவு"என்றான். வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.
நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு" என்றான். நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது.

மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான். அதனிடமிருந்து அசைவேயில்லை!

ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்- "நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது".

இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.

வாயை மூடிக்கிட்டு ஒரு மொபைல் போன் குறைந்தது 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்கும் சாமானியன்,  ஒரு பசு மாட்டுக்கு 10ஆயிரம் விலைகொடுத்து வாங்க வலிக்குது. 

5ஆயிரம் கொடுத்து ஒரு ஆட்டுக்குட்டிய வாங்க வலிக்குது.

தினமும் 20, 50, 100, 200 ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு செலவு செய்யும் சாமானியன் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கொடுங்கன்னு சொல்றான்.

நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம் பற்றி வாய் கிழிய பேசுவிங்க,  உங்களுக்காக உங்க ஊருக்காரன் வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பெண்ட்ரைவ் கூட வாங்க மாட்டிங்க, உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அமேசான், பிளிப்கார்ட்… அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிற…

அரிசி போட்டவுடன் வேகனும்!
சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் ! பொடிசா இருக்கணும் !

ஆனா நோய் வரக்கூடாது. பழுப்பு நிறத்துல இருக்ற அரிசிய வெள்ளையா கேட்டா அவன் எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்?

தப்பு யார் மேல?
கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாது ன்னு நீ கடைகாரண்ட கேட்ப...அவன் விளைவிக்கிறவண்ட சொல்றான்…விளைய வைக்றவன் பூச்சி மருந்த அடிக்றான்...நீயும் வாங்கி சாப்டுற...அப்றோம் அது வலிக்குது, இது வலிக்குதுன்னு டாக்டர்ட்ட போற…

அங்கே என்ன நடக்குது?
இதுக்கு ஒழுங்கா நாலு கீரை பூச்சி கடிசிருந்தாலும் ஒழுங்கா கழுவி தின்னுருக்கலாம்ல?

எல்லோரும் ஆடு மாடு மேச்சவன் வாரிசுதான். என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும். இப்போ பேன்ட் சட்ட, பேமிலி டாக்டர், KFC Chicken, Pizza, Burger னு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?

நல்லது எது கேட்டது எதுன்னு புரியாம வாழ்றதவிட, இன்னும் ஆடு மாட வச்சு சானிய அள்ளி உரமாக்கி எங்கே ஒரு மூலைல உனக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு 
மேலானவன் என்பதை என்று உணர்வீரோ...
 
நல்லதை சாப்பிட நினை..!
சாப்பிட கொடுத்தவனை நினை..!!
வாழ்க - விவசாயி - விவசாயம்..!!!

Motivational - 24 May 2020




Thursday, 21 May 2020

இரட்டை சொற்கள்!

🦜.. இரட்டை சொற்கள்! ..🦜

   🍀. குண்டக்க மண்டக்க :
🔸குண்டக்க : இடுப்புப்பகுதி,
🔸மண்டக்க: தலைப் பகுதி,
சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,
வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பதுதான்...

   🍀. அந்தி, சந்தி:
🔸அந்தி : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது..
🔸சந்தி: . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது..

   🍀. அக்குவேர்,ஆணிவேர்:🔸 அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்...🔸 ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்...

   🍀. அரை குறை:
🔸 அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..🔸 குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது...

   🍀. அக்கம், பக்கம்:
🔸 அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்...
🔸 பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்...

   🍀 கார சாரம் :
🔸காரம் : உறைப்பு சுவையுள்ளது...
🔸சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது...

   🍀.இசகு பிசகு: 
🔸 இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றறுபவர்களிடம் ஏமாறுதல்...
🔸 பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்...

   🍀 .இடக்கு முடக்கு: 
🔸 இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்...
🔸 முடக்கு : கடுமையாக எதிர்த்து .தடுத்து பேசுதல்...

   🍀. ஆட்டம் பாட்டம் :
🔸 ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது...
🔸பாட்டம் : ஆட்டத்திற்கு பொருத்தமில்லாமல் பாடுவது...

   🍀. அலுப்பு சலிப்பு :
🔸. அலுப்பு: உடலில் உண்டாகும் வலி...
🔸. சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,..

   🍀. தோட்டம் துரவு , தோப்புது ரவு,
🔸 தோட்டம் : செடி, கொடி கிரை பயிரிடப்படும் இடம்...
🔸தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்...
🔸துரவு: கிணறு...

   🍀. காடு கரை :
🔸 காடு : மேட்டு நிலம் (முல்லை)...
🔸 கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்)...

    🍀.காவும் கழனியும்:
🔸 கா : சோலை...
🔸 கழனி: வயல்.. (மருதம் )...

   🍀 நத்தம் புறம்போக்கு :
🔸 நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை...
🔸 புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்...

   🍀 பழக்கம் வழக்கம் :
🔸 பழக்கம் : ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது...
🔸 வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்தது செய்வது..

   🍀சத்திரம் சாவடி :
🔸 சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி )...
🔸 சாவடி: இலவசமாக தங்கும் இடம்...

   🍀. நொண்டி நொடம் :
🔸. நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்....
🔸. நொடம் : கை, கால் . செயல் சுற்று இருப்பவர்..

   🍀. பற்று பாசம் :
🔸 பற்று :நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்...
🔸 பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...

   🍀 ஏட்டிக்கு போட்டி :
🔸 ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது... ( ஏடம் : விருப்பம்)
🔸 போட்டி : விரும்பும் பொருள். செயலுக்கு எதிராக வருவது தான்...

   கிண்டலும் கேலியும்:
🔸 கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது....
🔸 கேலி : எள்ளி நகைப்பது,..

   🍀. ஒட்டு உறவு :
🔸 ஒட்டு : இரத்த சம் பந்தம் உடையவர்கள்...
உறவு : கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்மமானவர்கள்...

   🍀 பட்டி தொட்டி :
🔸 பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)...
🔸 தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்...

   🍀 கடை கண்ணி :
🔸 கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்...
🔸 கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்...

   🍀 பேரும் புகழம் :
🔸 பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை..
🔸 புகழ்: வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை....

   🍀. நேரம் காலம் :
🔸 ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து கெள்வது (Time,..
🔸 காலம் : ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு..

   🍀 பழி பாவம் :..
🔸 பழி: நமக்கு தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலை செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்...
🔸 பாவம், : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி...

   🍀 கூச்சல் குழப்பம்:
🔸 கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்... (கூ - கூவுதல்)
🔸 குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தை கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்...

   🍀 நகை நட்டு :
🔸 நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியானம்.)
🔸 நட்டு : சிறிய அணிகலன்கள்..

   🍀 பிள்ளை குட்டி:
🔸பிள்ளை : பெதுவாக ஆண் குழந்தையை குறிக்கும்...
🔸 குட்டி: பெண் குழந்தையை குறிக்கும்...

   🍀 பங்கு பாகம்:
🔸 பங்கு: கையிருப்பு.. பணம்,நகை, பாத்திரம்.( அசையும் சொத்து)...
🔸 பாகம் : வீடு, நிலம்.. அசையா சொத்து...

   🍀வாட்டம் சாட்டம் :
🔸 வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்...
🔸 சாட்டம் : வளமுள்ள கனம். தோற்றப் பொலிவு...

   🍀. காய் கறி :
🔸 காய்: காய்களின் வகைகள்...
🔸 கறி : சைவ உணவில் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகள்...

   🍀 ஈவு இரக்கம் :
🔸 ஈவு : (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்...
🔸 இரக்கம் : பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்...

   🍀 பொய்யும் புரட்டும்:
🔸 பொய்: உண்மையில்லாததை கூறுவது...
🔸 புரட்டு : ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மை யென கூறி நடிப்பது...

   🍀 சூடு சொரனை: 
🔸 சூடு : ஒருவர் தகாதசெயல், சொல்லை செய்யும்போது உண்டாகும் மனகொதிப்பு...
🔸 சொரனை: நமக்கு ஏற்படும் மான உணர்வு,,,,

Motivational - 22 May 2020




Wednesday, 20 May 2020

படித்தில் பிடித்தது

ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் 
இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன்.

அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!

என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!

அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன்.

டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம்.

அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.

ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.

மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்!" என்றேன்.

நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள்.

1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட்.

பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா!)

மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது.

‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.

அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.

2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.

நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன்.

அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.

பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.

சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.

அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.

“சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”

அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”

“ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”

என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன்.

அது ‘ஙே’ என்று விழித்தது.

அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன.

சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது!

இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது.

நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.

இதில் ரகசியம் என்னவென்றால் அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை.

நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோ மானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்!

'வீண் வாதங்களைத் தவிருங்கள்..''

'வீண் வாதங்களைத் தவிருங்கள்..''

அதுவா.? இதுவா? அவரா..? இவரா..? நான் சொல்வது தான் சரி, இல்லை.. இல்லை நான் சொல்வது தான்  சரி என்று இப்படி ஏதாவது தமக்கு சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, ஏதாவது செயலைப் பற்றி ஓயாமல் வாதம் செய்து கொண்டு பொழுதையும் வீணடித்து, வம்பையும் விலைக்கு வாங்கி வருவோர் பலர் நம் இடையே இருந்து கொண்டு இருக்கிறார்கள். 

ரயில் பயணங்களிலும், வேறு பல பொது இடங்களிலும் பலர் இந்த வீண் வாதத்தில் ஈடுபட்டு கசப்பான விளைவுகளைச் சந்திக்கின்றனர். 

சில நேரங்களில் தீவிரமாக வாதம் செய்து, பேச்சு முற்றிப் போய் கடைசியில் அடிதடியில் போய், ஏன் கொலையிலே முடிவதை நாம் அன்றாடும் செய்தித்தாள்களில் பார்க்கின்றோம்..

இந்த விவாதப் பேய் உங்களை உணர்ச்சி வசப்பட வைத்து சிந்தனை செய்து முடிவு எடுக்கும் திறனை மழுங்கடித்து, தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம். 

இதனால் தான் பல பொது இடங்களில், "இங்கு அரசியல் பேசாதீர்கள்" என்று எழுதி வைத்து இருப்பதைப் பார்த்து இருக்கின்றோம்..

ஒருவர் தன் மனதில் ஒரு தீர்மானமான நிலைப்பாட்டை கொண்டவராக இருந்தால் அதனை எப்பாடுபட்டாவது நிலை நிறுத்தத் தான் பார்ப்பார். எவ்வளவு செய்திகளையும், காரணங்களையும் முன் வைத்து மணிக்கணக்காக விவாதம் செய்தாலும், அவர் தன் நிலையில் இருந்து மாற மாட்டார்கள்..

கடைசியில் கசப்பு உணர்வு தான் மிஞ்சும். பின் ஏன் இந்த வீண் வாதம்?இதில் உளவியல் சார்ந்த உண்மை ஒன்றும் உள்ளது. 

ஒருவர் தன் மனத்தளவில் கொண்டுள்ள வாதத்தினுள் தன்னையே (தற்குறிப்பேற்றி) உருவகப்படுத்திக் கொள்கிறார் (Personification). 

அதனால் அந்த வாதத்தில் அவருடைய நிலையை யாராவது எதிர்த்து வாதாடினால், அவர் தன்னையே எதிர்ப்பதாக எண்ணி உணர்ச்சி வசப்படுவார். 

அதில் அவருடைய ஈகோ உணர்ச்சிகள் எழுச்சி உருவதால், சம நோக்கில் எந்த விதமான வாதங்களையும் மனதில் வாங்கி சீர் தூக்கும் மன நிலையை இழந்து விடுவார். 

ஆகையால் தான்  வாதப்பிரதி வாதங்களை தவிருங்கள் என்ற அறிவுறையை நமக்கு போதித்து இருக்கிறார்கள்.

''வாதத்தில் வென்றாரே தோற்றார், ஏனெனில் அதில் விஞ்சிய மனக் கசப்பைக் காண்'' என்கிறார் ஒரு மனோதத்துவ அறிஞர்.

சில நேரங்களில் மற்றவர்களுடன் ஏதாவது பொருள் பறறிய வாதங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை அமைந்தால் அது ஆக்கபூர்வமான வாதமாக இருத்தல் வேண்டும். 

மேலும், அந்த வாதம், எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி இருக்க வேண்டும் அல்லாமல், அதில் ஈடுபடும் தனி நபர் பற்றியதாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..

நம் குடும்பத்திலோ, அல்லது நண்பர்களுடனோ ஒரு சாதாரண உரையாடல், பேச்சு தடித்தனால் கடும் வாதமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டால், அதில் ஒருவர் சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு வெளி வருவது  நலம். 

அல்லது ஏதாவது நகைச்சுவைகளை சொல்லி அங்கு தோன்றும் இறுக்கமான சூழ்நிலையை  திசை திருப்பி மனங்கள் முறுக்கிக் கொண்டு நிற்பதை தவிர்க்க முயல வேண்டும்.

பல குடும்பங்களில் தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு செயலுக்காக வாதம் செய்து கொண்டே இருப்பர். 

பேரன், பேத்தி எடுத்த பிறகும் கூட ஓயாமல், தான் செய்தது தான் சரி என்று இருவரும் வாதிட்டுக் கொண்டே இருப்பார்கள்... 

அவ்வாறு நெருங்கிய உறவுக்குள் ஏற்படும் வாதங்களை சரியான அணுகுமுறையால் முடிவுக்கு கொண்டு வரவில்லையெனில், சில நேரங்களில் உறவுகள் நாடைவில் முறிந்து விட ஏதுவாகும். 

சில சமயம் உடல் நிலை, மன அழற்சி, வெளியே கொண்ட கோபம் போன்ற காரணங்களால் பேச்சு தடிக்கும். 

அப்போது சரியான காரணத்தை உணர்ந்து மற்றவர் தணிந்து போக வேண்டும்..

ஆம்., நண்பர்களே..,

ஒன்றுக்குமே ஆகாத குப்பை வாதங்களைத் தவிருங்கள். தவிர்க்க இயலாவிட்டால், மற்றவருக்கு இடம் கொடுத்து அவருடைய வாதத்தையும் தடுக்காமல் கேட்டு, பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். 

முக்கியமாக, நம் கருத்தை அது எவ்வளவு தான் உண்மை மற்றும் பொருள் செறிந்ததாக இருந்தாலும், ஏனையோர் முழு மனத்துடன் (முழுவதையும்) எற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். 

ஏனெனில் அது இயற்கைக்கு எதிரான நிகழ்ச்சி! அவரவர்க்கு தான் சொல்வது தான் பெரிது. 

அவரவர் வழியே சிறிது சென்று தான் அவர்களை நம் வழிக்கு திருப்ப முயற்சிக்க வேண்டும்.. நாம் நினப்பது போல் இவ்வுலகம் சுழல்வது இல்லை.

Motivational - 21 May 2020




Tuesday, 19 May 2020

Motivational - 20 May 2020




நம் மனதை நிமிர்த்தும் மந்திர சொற்கள்.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை....*

*நம் மனதை நிமிர்த்தும் மந்திர சொற்கள்..!!*

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  

அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை அடிக்கடி  வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். 

மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல..

5.பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல..

6.சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் 
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.கஷ்டம் தான்,ஆனா முடியும்...

10.நஷ்டம் தான் , ஆனா மீண்டு வந்திடலாம்.

11.இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு...

14.உட்கார்ந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப்  பார்...

15.இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே..

19.முடியுமான்னு நினைக்காதே. முடியணும்…னு நினை...

20.கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

21.அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு...

22.விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை...

24.சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

25.ஆகா, இவனும் அயோக்கியன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.

26.உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், 
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

31.அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

32.நாலு காசு பார்க்கின்ற நேரம். கண்டதைப் பேசிக் காலத்தை கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

*வீழ்வது கேவலமல்ல,* 
*வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்..* 
*முயற்சியுடன் எழுந்திடுங்கள்..!!* 

*உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.வெற்றி நமதே!* 

*இந்த மந்திரச் சொற்களை உபயோகப்படுத்தி நான் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறேன்.* 

*நீங்களும் இன்று முதல் கடைபிடித்து பிரமாண்ட வளர்ச்சி அடைய (அடைவீர்கள்) எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.*



🔆🔆🔆🔆🔆🔆🔆🔅🔆🔆🔆🔆